Tuesday 6 March 2012

இறைவன் அல்லாதவர்களை புகழலாமா?


புகழ்கள் 4 வகைப்படும் 


1. இறைவன் தன்னைத்தானே புகழ்வது
2. இறைவன் மற்றவர்களை புகழ்வது
3. மனிதன் இறைவனைப் புகழ்வது
4. மனிதர்கள் மனிதர்களை புகழ்வது



இறைவன் தன்னைத்தானே புகழ்வது

O அவன் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன் (57:1) 

O அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் (17:1) 

இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இவை இறைவன் தன்னை தானே புகழ்வதற்கு உதாரணங்கள் ஆகும்.



இறைவன் மற்றவர்களை புகழ்வது

உதாரணமாக இறைவன் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை புகழ்வது: 

O நபியே! நீங்கள் நிச்சயமாக உயர்ந்த நட்குணத்தின் மீது இருக்கிறீர்கள்  (சூரா நூன் 04 ) 

O நபியே! நாம் உம் புகழை (வானளாவ) உயர்த்தி விட்டோம்  (சூரா அலம் நஸ்ரஹ் 04 ) 

O அனைத்து உலகத்தினருக்கும் அருளாகவே (ரஹ்மத்) தவிர (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை." (21:107) 

இதே போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களில் இறைவன் நபிகள் நாயகத்தையும் ஏனைய நபிமார்களையும் வலிமார்களையும் புகழ்ந்து கூறி உள்ளான்.


மனிதன் இறைவனை புகழ்வது

இதற்கு விளக்கம் தேவையில்லை. ஏனென்றால் நாம் எல்லோரும் எந்நேரமும் இறைவனை புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். 

சுபானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்! என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறோம். 



மனிதர்கள் மனிதர்களை புகழ்வது

இதையும் நமது வாழ் நாளில் நாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம். தந்தை பிள்ளையை புகழ்வதும், கணவன் மனைவியை புகழ்வதும், பிள்ளை தாயை புகழ்வதும், காதலன் காதலியை புகழ்வதும், மனிதன் அரசனை புகழ்வதும், ஆசிரியர் மாணவரை புகழ்வதும், அரசன் அமைச்சர்களை புகழ்வதும், சீடர்கள் தலைவனை புகழ்வதும், பாமரன் அறிவாளியை புகழ்வதும் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இவை அனைத்தும் புகழ்தான். அப்படியென்றால் நாம் வாழ்நாளில் செய்து கொண்டிருப்பது தவறா? இல்லை. அப்படியென்றால் இறைவன் கூறுகிறானே: " புகழ் அனைத்தும் இறைவனுக்கே" என்று. அப்படியாயின் நாம் மற்றவர்களை புகழ்ந்தால், இறைவனுக்கு எப்படி புகழ் சென்றடையும்? 

அதற்குரிய விடை
நாம் யாரை புகழ்ந்தாலும் எல்லாப் புகழும் இறைவனுக்குரியதே, ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் இறைவனின் படைப்பினங்கள். நாம் எந்த மனிதர்களை புகழ்ந்தாலும், எந்த வஸ்துவை புகழ்ந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் குத்ரத்துகள். நாம் அந்த படைப்பை புகழும் பொழுது, அந்த புகழ் அந்த குறிப்பிட்ட படைப்பினத்திற்கு சென்றடையாது. அந்த புகழ் இறைவனுக்குச் சொந்தமானது. எனவே அந்த புகழ் இறைவனிடம்தான் சென்றடையும். இதுதான் உண்மையான தவ்ஹீத். ஆனால் இன்று தவ்ஹீத் என்ற பெயரில் ஷிர்க்கையும், வழிக்கேட்டையும் போதிக்கிறார்கள். நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு தான் நாம் உண்மையான தவ்ஹீத் வாதிகளான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத் தாபியீன்கள், இமாம்கள், சூபியாக்கள் காட்டிச்சென்ற எழுதிவைத்த கிதாபுகளை வாசித்தால் எமக்கு தெளிவான தவ்ஹீத் கிடைக்கும். ஆனால் இன்று சிலர் மக்களுக்கு தஹ்வா பணி செய்கிறோம், தவ்ஹீதை நிலை நாட்ட போகிறோம், தீன் உடைய வேலையை செய்கிறோம், தப்லீக் உடைய வேலையை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மக்களை குழப்பி உண்மையான தவ்ஹீதை போதிப்பதற்கு பதிலாக, வழிகேட்டையும், ஷிர்க்கையும் போதிக்கிறார்கள். 

உண்மையான இஸ்லாமிய (அகீதா) கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதி மூச்சு வரை நாம் இருக்க இறைவன் அருள் புரிவானாக! 

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!

Monday 5 March 2012

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை தரக்குறைவாக நினைப்பவரைப் பற்றி முன்னெச்சரிக்கை

ஒரு முறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு போரில் கிடைத்த “கனீமத்” என்ற வெற்றிப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்டிருக்கும் போது பனூதமீம் என்ற கிளையைச் சார்ந்த துல்- குவைஸிரா என்ற ஒரு மனிதன் “நபியே நீங்கள் நீதமாகப் பங்கீடு செய்யுங்கள்” என்று கூறினான். இதைக் கேட்ட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கடும் சினத்துடன் “நீ நாசமாகுவாயாக, நான் நீதமாக நடக்காவிடில் வேறு யார்தான் நீதமாக நடந்து விடப்போகிறார்கள். நான் நேர்மையாக நடக்காவிட்டால் நீ பெறும் கைசேதம் அடைந்திருப்பாய்...” என்று கூறினார்கள்.


இதைக் கண்ணுற்றுக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நாயகமே எனக்கு அனுமதி வழங்குங்கள். அவனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்...” என்று கோரினார்கள்.

அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “அவனை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவனுக்கு சில சகாக்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் தொழும் தொழுகையையும், அவர்கள் நோற்கும் நோன்பையும் உங்கள் தொழுகை, மற்றும் நோன்புடன் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் உங்கள் தொழுகை நோன்பை எல்லாம் மிக அற்பமாகக் கருதுவீர்கள். (அந்தளவுக்கு அவர்களின் தொழுகையும்,நோன்பும் அமைந்திருக்கும்) குர்ஆன் ஓதுவார்கள். (ஆனால்) அது அவர்களின் தொண்டையைத் தாண்டி செல்லாது. வேட்டைப் பிராணியில் இருந்து குறி தவறிப் பாய்ந்து செல்லும் அம்பைப்போல அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்...” என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் என்பதாக அபூயஸீத் அல்குத்ரி அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

* ஸஹிஹ் அல் புகாரி - 3610 கிதாபுல் மனாகிப் பாபு அழாமத்தின் நுபுவ்வத்தி,
* ஸஹிஹ் அல் முஸ்லிம் - 1064 கிதாபுஸ்ஸக்காத்தி பாபு இஃதாயில் முஅல்லபத்தி
* முஸ்னத் அஹ்மத் பாகம்-3 பக்கம் 56
* இப்னுமாஜா - 172 - பாபுன் பீ திக்ரில் கவாரிஜி
* மிஷ்காத் - 5894, பாபுன் பில் முஃஜிஸாத்தி


​எனது அன்புச் சகோதரர்களே! இப்போது கூறப்பட்ட இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் நமது சிந்தனையைச் செலுத்தினால் துல் குவைஸிராவின் வாரிசுகள் இந்த புவியெங்கும் பரவி கிடப்பதை நம்மால் காணமுடிகிறது. வணக்கவழிபாடு என்று எடுத்துக் கொண்டால் மேற்படி ஹதீஸில் வந்திருப்பது போல எந்நேரமும் தொழுகையும் கையுமாக இருந்து வருகிறார்கள். ஆனால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மகத்துவம் என்று எடுத்துக்கொண்டால் அந்த விஷயத்தில் புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற முதுமொழிக்கேற்ப தங்களின் தலைவனாகிய துல்குவைஸிராவை பன்மடங்கு மிஞ்சிவிட்டார்கள். ஏனெனில் நீதத்தின் பிறப்பிடமாகவும் நேர்மையின் விளைநிலமாகவும் திகழ்கின்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நீதத்தைப் பற்றி மாத்திரம் அன்றைய துல்குவைஸிரா கேலி செய்தான். ஆனால் இன்றைய துல்குவைஸிராக்களோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நுபுவ்வத்தையே கேலிப் பொருளாக ஆக்கிக் கொண்டார்கள். அதாவது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஒரு சராசரி மனிதராகச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “நம்மைப்போன்ற சாதாரண மனிதராக இருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு என்று தனிப்பட்ட மரியாதையோ கௌரவமோ இல்லை. அதனால் அவர்களுக்கென்று மீலாது விழா எடுக்க வேண்டியதில்லை. அவர்களைப் புகழ்ந்து மௌலிது ஓத வேண்டியதில்லை” என்று நாவு கூசாமல் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தாரை விட்டும் எல்லாம் வல்ல நாயன் நாம் யாவரையும் காத்தருள் புரிவானாக ஆமீ
ன்!